ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் 998 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசு மையத்தில் பயிற்சி படித்த 4 மாணவிகள் உள்பட 49 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
சிவில் சர்வீசஸ் தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்.,, ஐ.ஆர்.எஸ்., ஐ.ஏ.ஏ.எஸ். போன்ற 24 வகையான மத்திய அரசு அதிகாரிகளை நேரடியா தேர்வு செய்யவதற்காக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் இந்த தேர்வு முதல்நிலை, மெயின், நேர்காணல் என 3 நிலைகளை கொண்டது.
அந்த வகையில் 2012–ம் ஆண்டுக்கான 1091 காலி பணி இடங்களை நிரப்ப கடந்த வருடம் மே மாதம் 20–ந் தேதி முதல்நிலை தேர்வு நடந்தது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் 40–க்கும் மேற்பட்ட இடங்களில் ஏறத்தாழ 8 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 15 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5–ந் தேதி தொடங்கி 26–ந் தேதி வரை நடந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு முடிவு வெளியீடு
மெயின் தேர்வு முடிவு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதைத்தொடர்ந்து, இறுதி தேர்வான நேர்காணல் தேர்வு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்தில் மார்ச் 4–ந் தேதி தொடங்கி 26–ந் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வு முடிவை யு.பி.எஸ்.சி. நேற்று மாலை வெளியிட்டது.
அகில இந்திய அளவில் 998 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த ஹரிதா குமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தற்போது அவர் ஐ.ஆர்.எஸ். (இந்திய வருவாய் பணி) அதிகாரியாக பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு மையத்தில் படித்தவர்கள்
அகில இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ள 998 பேர்களில் 49 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் சிறப்பிடம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:– (அடைப்புக்குறிக்குள் ரேங்க் கொடுக்கப்பட்டு உள்ளது)
1. டி.பிரபு சங்கர் (7–வது ரேங்க்)
2. விஜயா கிருஷ்ணன் (34)
3. எம்.பி.முல்லை முகிலன் (46)
4. கே.கோபாலகிருஷ்ணன் (90)
5. டி.கங்காதரன் (91)
6. பி.சரவணன் (100)
7. எம்.பரணிகுமார் (109)
8. ஆர்.கேசவன் (111)
9., எஸ்.ராமமூர்த்தி (118)
10. எஸ்.சண்முகராஜன் (136)
மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை
சென்னையில் தமிழக அரசு நடத்தி வரும் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
மெயின் தேர்வுக்கு பயிற்சி பெறும் அனைவருக்கும் பயிற்சி மற்றும் தங்கு வசதியுடன் எவ்வித வருமான உச்சவரம்பு பாராமல் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மெயின் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், நிபுணர்களையும் வரவழைத்து மாதிரி நேர்முகத்தேர்வு (மாக் இண்டர்வியூ) பயிற்சி அளிக்கிறார்கள்.
சி.டி.யில் மாதிரி நேர்முகத்தேர்வு
இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக மாதிரி நேர்முகத்தேர்வு நிகழ்வு சி.டி.யில் பதிவுசெய்யப்பட்டு மாணவர்களிடம் கொடுக்கப்பட்டது. சி.டி.யில் பார்க்கும்போது தாங்கள் என்னென்ன தவறுகள் செய்துள்ளோம்? அதை எப்படி சரிசெய்ய வேண்டும்? இன்னும் சிறப்பாக எப்படி பதில் சொல்ல வேண்டும்? என்பதை எல்லாம் மாணவர்கள் துல்லியமாக அறிந்துகொண்டனர்.
இந்த புதுமையான பயிற்சி தங்களுக்கு யு.பி.எஸ்.சி. நேர்முகத்தேர்வில் சிறந்த முறையில் பதில் அளிக்க உதவியதாக தேர்வில் வெற்றிபெற்ற மாணவ–மாணவிகள் கூறியதாக அரசு பயிற்சி மையத்தின் முதல்வர் பி.பிரேம்கலா ராணி தெரிவித்தார்.
வெ.இறையன்பு
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர் வெ.இறையன்பு, அடிக்கடி அரசு பயிற்சி மையத்திற்கு சென்று ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் என்பது குறித்தும், நேர்முகத்தேர்வில் எப்படி பதில் சொல்ல வேண்டும்? என்றும் பயிற்சி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment