இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலிருந்தவாரே கண்காணிக்கும் புதிய மருத்துவத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதய நோய்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை குணப்படுத்தவும் அதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கவும் பயன்படும் இந்த புதிய கருவி பற்றிய விவரங்கள்:
மாறி வரும் உணவுப் பழக்கங்களினாலும் வாழ்க்கை முறையினாலும் இளம் வயதினர்கூட இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் அதனை முன் கூட்டியே கண்டறிவது கடினம் என்பதுதான்.
மாரடைப்பு போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இதய அறுவைசிகிச்சைகள் சிலவற்றில், இதயத்துடிப்பை சீராக வைக்கும் பேஸ் மேக்கர் கருவி இணைக்கப்படுவது வழக்கம். இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம். இந்த தொடர் கண்காணிப்பை எளிமைப்படுத்தும் வகையில், புதிய தொழில்நுட்பம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உடலினுள் பொறுத்தப்படும் இக்கருவி இதயத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதோடு அது தொடர்பான தகவல்களை மருத்துவமனைக்கும், குறிப்பிட்ட மருத்துவருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கிறது. அதற்காகவே இக்கருவி செல்போன் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை மூன்று நோயாளிகளுக்கு இக்கருவி பொறுத்தப்பட்டுள்ளது. நோய்களை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் பல புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தகைய கண்டுபிடிப்புகளில் முக்கியமானதாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
No comments:
Post a Comment