Tuesday, October 30, 2012

பள்ளி ஆசிரியர்கள் நியமனம் புதிய முறை!

பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் பிளஸ் டூ பட்டப் படிப்பு மதிப்பெண்களும் ஆசிரியர் படிப்புத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளையும் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்றாம்


வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும். இந்தத் தேர்வுகளில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற ஆசிரியர் பயிற்சி படிப்புகளைப் படித்தவர்கள் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.
“ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது. இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே என்றுக் கூறி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆறரை லட்சம் பேரில் 2,488 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்வு நேரம் போதவில்லை என்ற ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர்களுக்கான தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக்கி மறு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்களா அல்லது மீண்டும் போட்டித் தேர்வு எழுத வேண்டியதிருக்குமா? வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் இருக்குமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கிடையில், பள்ளிக் கல்வி அமைச்சர் என் ஆர். சிவபதி தலைமையில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் டி. சபீதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே. சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் தேவராஜன் ஆகியோரடங்கிய குழு, இதற்கான விதிமுறைகளை வகுத்து தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இந்தப் புதிய ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் டூ, இளநிலைப் பட்டம், பிஎட் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய நான்கு தேர்வுகளுக்கும் சேர்த்து நூறு மதிப்பெண்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு தேர்வுக்கும் எவ்வளவு வெயிட்டேஜ் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தே ர்வுக்கு 10 மதிப்பெண்கள், பட்டப் படிப்புத் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள், பிஎட் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ் டூ தேர்வுக்கு 15 மதிப்பெண்களும் ஆசிரியர் டிப்ளமோ படிப்புத் தேர்வுக்கு (பி.டிஎட், டிஇ.எட்) 25 மதிப்பெண்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படும். அதாவது, இந்த மூன்று தேர்வுகளையும் சேர்த்து மொத்தம் நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை, இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, தற்போதைய நடைமுறையே தொடரும். அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக மாநில அளவிலான பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதும் அந்த அரசு ஆணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அவர்களது பிறந்த தேதி கருத்தில் கொள்ளப்படும். அதாவது வயது அதிகமுடையவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தப் புதிய விதிமுறை காரணமாக, ஆசிரியர் பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதாது. இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை, பிளஸ் டூ வகுப்பிலும், அதைத் தொடர்ந்து ஆசிரியர் பயிற்சித் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். அப்போதுதான் வேலையில் சேருவது எளிதாக இருக்கும். பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வுடன் பிளஸ் டூ தேர்வு, பட்டப் படிப்புத் தேர்வு, ஆசிரியர் பட்டத் தேர்வு ஆகிய தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in