சென்னை: தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் அகில இந்திய பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி போன்ற அகில இந்திய பணிகளுக்கு அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை அண்ணா நகரில், தமிழக அரசால் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி மையத்தின் மூலம் தமிழகத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று, தேர்வில் வெற்றிப் பெற்று, அரசு உயர் அதிகாரிகளாக, தலைநகர் புதுடெல்லியிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பயிற்சி மையத்தில் தங்கி பயிலும் மாணவர்கள் போட்டித் தேர்வினை நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணத்தை சென்ற ஆண்டு 1200 ரூபாயாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
தற்போது பயிற்சி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணத்தை 2000 ரூபாயாக உயர்த்தியும், இனி வருங்காலங்களில் உணவுக் கட்டணத்தை ஆண்டுதோறும் ஐந்து விழுக்காடு உயர்த்துவதற்கும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசின் அகில இந்தியக் குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.) தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெற்று, புதுடெல்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு 3000 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு 200 மாணவ, மாணவியர்களுக்கு வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் புதுடெல்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கு கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு, பயணச் செலவினமாக தலா 2000 ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த தொலைநோக்கு நடவடிக்கைகளினால், தமிழக மாணவ மாணவியர் அதிக அளவில் அகில இந்திய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment